ஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்!
ஒவ்வொருவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் வேலை, எதிர்காலம், திருமணம் என்று ஆர்வமாக இருந்து வருகிறார்கள். ஆனால், அப்படியிருக்கும் நேரத்தில் உடலின் ஆரோக்கியம் பற்றி கவலைப்படுவதில்லை. அந்த தருணத்தில் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்து வருகிறோம். அப்படி நாம் மேற்கொள்ளும் விஷயங்களில் சில நன்மையாகவும், சில தீங்கு விளைவிப்பவையாகவும் இருக்கலாம். ஆனால் பலருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்கள் என்னவென்று தெரிவதில்லை. அப்படி தெரியாமலேயே அன்றாடம் அவற்றை பின்பற்றி வந்து, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
உங்களுக்குத் தெரியுமா? நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும். அதை அடம்பிடிக்கவிடாமல் உடனே கொடுத்துவிடுவது நல்லது. அது தடைப்படும்போதுதான் ஏற்படுகிறது பிரச்னை. எனவே, அதன் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியது அவசியம். பசிக்கும்போது சாப்பிடுங்கள்; தூக்கம் வரும்போது தூங்குங்கள்; விழிப்பு வரும்போது விழித்துக்கொள்ளுங்கள்.
இது நம் உடலில் இயங்கும் இயற்கை கடிகாரம் சொல்லும் முக்கியமான செய்தி; முறையாகப் பின்பற்றுங்கள். இது, நம் உடல் ஆரோக்கியம் அதிகரிக்க வழிவகுக்கும்!
இனி, நல வாழ்வுக்குப் பின்பற்றவேண்டிய முத்தான வழிகள்…
நாம் பிறந்து வளரும் இடத்துக்கு ஏற்ப நமது உடல் மூலக்கூறுகளில் மாற்றம் ஏற்படும். ஆகவே, ஒருவர் தான் பிறக்கும் இடத்தில், அந்தந்த மண்ணில் விளையும் பொருட்களை அன்றாட உணவாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தமிழகத்தின் பாரம்பர்ய உணவுகளான கம்பு, சாமை, சிறுதானியங்கள் ஆகியவற்றை தமிழர்கள் தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும்.
தினமும் அதிகாலை எழுந்தவுடன் 20 முதல் 40 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியம் ஏற்படும். அந்த 20 நிமிடம் நடைபயிற்சி அல்லது ஓட்டம் போன்றவற்றில் ஈடுபடுதல் நல்லது. இதன் காரணமாக உடலின் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, உடலின் பருமன் பிரச்சனைகளும் தீரும்.
தினந்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும், காய்கறிகள் மற்றும் பழங்களையும் சாப்பிட்டு வந்தால் உடல் ரீதியாக ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை தவிர்க்கலாம்.
எப்போதும் புதிதாகத் தயாரித்த, மிதமான சூடுள்ள உணவுகளையே சாப்பிடப் பழகுங்கள். ஃபிரெஷ்ஷான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இதுபோன்ற உணவுகள்தான் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் சீரான அளவில் கிடைக்கும். சுரப்பிகளைச் சரியான அளவில் சுரக்க உதவும்.